ADDED : மார் 26, 2024 01:12 AM

எஸ்.சின்னராசு டேவிட், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
முன்பெல்லாம், பஞ்சாயத்து தேர்தல் முதல் பார்லிமென்ட் தேர்தல் வரை எது நடந்தாலும், ஒரு புது திரைப்படம் பார்க்கும் ஆவலோடு, ஓட்டுச்சாவடி திறப்பதற்கு முன்பே சென்று வரிசையில் நின்று ஓட்டளித்து விட்டு வருவோம்.
நம் வாக்கை பதிவு செய்ததற்காக, இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் மையை பெருமையுடன் பார்ப்பதோடு, போகிறவர், வருகிறவர் அனைவரிடமும் காட்டி புளகாங்கிதமடைவோம்.
ஆனால் தற்போது, தேர்தல் ஏன் வருகிறது, நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கேள்விகள் நம் மனதை குடைகின்றன.
'தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது காவல் துறை வழியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷனும் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கும்' என்று பேட்டி அளித்து இருக்கிறார் நம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.
கடந்த, 2019ல் நடந்த தேர்தலின் போது, முறைகேடுகளில் ஈடுபட்ட எத்தனை பேர் மீது, காவல் துறையும், தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுத்துள்ளன என்று, நம் மூளைக்கு எட்டும் வகையில், அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.
அதை விடுங்கள்...
போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கல்வித் தகுதி என்ற ஒன்றை நிர்ணயிக்க மாட்டார்கள்
ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதையும் தடுக்க மாட்டார்கள்
ஊழல் வழக்குகள், கிரிமினல் குற்றங்கள், அன்னிய செலாவணி மோசடிகள் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முன் வர மாட்டார்கள்.
கேட்டால், 'வழக்கு நிலுவையில் உள்ளது; குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்; குற்றம் நிரூபிக்கப்படவில்லை; நீதிமன்றம் இன்னும் தண்டனை அளிக்கவில்லை' என்று, ஏதாவது காரணம் சொல்வர்.
ஆக, தகுதியற்ற வேட்பாளர்களை போட்டியிட அனுமதித்து, அந்த தகுதியற்ற பேர்வழிகளை நம்மைக் கொண்டே தேர்ந்தெடுக்க வைத்து, பழி முழுவதையும் நம் தலையிலேயே திருப்பி போட்டு... என்னே ஜனநாயகம்!
இதனாலேயே, தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் போகிறது.

