ADDED : ஏப் 07, 2024 02:06 AM
சென்னை:''தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், படு தோல்வி அடைவதுடன், பல தொகுதிகளில் டிபாசிட் இழப்பர்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தி.மு.க., தலைமையில், 'இண்டியா' கூட்டணியை வலுவாக உருவாக்கி உள்ளோம். தேர்தலில், 40 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் படு தோல்வி அடைவதுடன், பல தொகுதிகளில் டிபாசிட் இழப்பர். வட மாநிலங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி படு தோல்வி அடையும்.
எங்கள் தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு கொண்டு வந்த, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் சட்டங்களை வாபஸ் பெற, லோக்சபாவில் குரல் எழுப்புவோம் என்று தெரிவித்துள்ளோம். இந்தியா பல மதங்களை கொண்ட நாடு. இங்கு ஒரே மதம், ஒரே மொழி என ஒற்றை கலாசாரத்தை புகுத்துவதை முறியடிப்போம்.
கடந்த 10 ஆண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, மோடி அரசு சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்த்துள்ளனர். அந்த நடவடிக்கைககள் முறியடிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுப்போம்.
பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் முறையில், சட்டங்கள் நிறைவேற்றப்படும். நுாறு நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்துவதோடு, தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்துவோம்.
நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க முயற்சிப்போம். அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவோம். மொழி திணிப்பை எதிர்ப்போம். அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை, அவரவர் தாய்மொழியில் எழுதும் வாய்ப்பை உருவாக்குவோம்.
தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் உருவாக்குவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை அலுவலக மொழியாக்குவது உள்ளிட்ட, மொழி உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டங்களை செய்துள்ளோம். 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு பெற வழிவகை செய்வோம்.
விவசாய கடன்களை ரத்து செய்வது; விளைபொருளுக்கு நியாயமான விலை நிர்ணயிப்பது; பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு; விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை, தேர்தல் அறிக்கையில் வலியுறுத்துகிறோம்.
கவர்னர் பதவி தேவையில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. எனினும் தற்போது மாநில அரசின் ஆலோசனை பெற்று கவர்னரை நியமிக்க வலியுறுத்துவோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம். கச்சத்தீவை மீட்பதாக இருந்தால், 10 ஆண்டுகளில் பா.ஜ., செய்திருக்கலாம். இப்பிரச்னையை ஓட்டு சேகரிக்க பயன்படுத்துவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.

