ADDED : மே 09, 2024 11:40 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடனை திருப்பி கேட்ட தகராறில் கூலித்தொழிலாளி ஆனந்தகுமாரை 32, குத்திக் கொன்ற வழக்கில், 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரம் ஆனந்தகுமார்; நண்பர் தேவதானத்தை சேர்ந்த மருதுபாண்டி 24. மருதுபாண்டிக்கு ஆனந்தகுமார் ரூ.15 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தார். திரும்ப பெறுவதில் கருத்து வேறுபாடு, தகராறு ஏற்பட்டது.
2023 ஜன. 22 இரவு 8:00 மணிக்கு கடனை திருப்பி தருவதாக ஆனந்த குமாரை, தேவதானம் ஊருக்கு வரும் வழியில் உள்ள இசக்கி அம்மன் கோயில் அருகில் வரவழைத்து மருதுபாண்டி தகராறு செய்துள்ளார். நண்பர்கள் துணையுடன் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் மருதுபாண்டி, அவரது சகோதரர் கருப்பசாமி 28, நண்பர்கள் சுந்தரபாண்டியன் 23, விஜயராஜ் 23, அஜித்குமார் 23, முத்துகிருஷ்ணன் 22, மாசானம் 27, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இதில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.