மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்
மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்
ADDED : மார் 05, 2025 05:28 AM

புதுடில்லி : தமிழகத்தில், மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெறுவதற்காக, நுகர்வோர் தங்களின் ஆதார் எண்ணை, மின் நுகர்வோர் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, எம்.எல். ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்படி மனுதாரரை ஏற்கனவே அறிவுறுத்தியது. அதன்படி, மனுதாரர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு எதிராக எம்.எல்.ரவி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை, மாநில அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ளது. இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.