சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம்: தடை செய்யப்பட்ட நாயை வளர்த்ததால் விபரீதம்
சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம்: தடை செய்யப்பட்ட நாயை வளர்த்ததால் விபரீதம்
ADDED : மே 06, 2024 12:28 PM

சென்னை: 'சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது' என சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமின்றி ராட்வெய்லர் நாய் இனத்தை இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை வளர்க்கலாமா? என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ராட்வெய்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. பலத்த காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, 3 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் எவை?
போயர்போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு, தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமிஷனர் விளக்கம்
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது. ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இன்று காலை நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் யார் யாரெல்லாம் ராட்வெய்லர் நாய்களை வளர்க்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடக்கிறது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும். விசாரணைக்கு பிறகு கால்நடைத்துறையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.