ADDED : ஆக 03, 2024 12:44 AM
சென்னை:நாடு முழுதும், 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு, அடுத்த மாதம் முதல் டிசம்பர் வரை நடக்க உள்ளது. அதையொட்டி, மண்டல அளவிலான பயிலரங்கம் நேற்று சென்னையில் நடந்தது. மத்திய கால்நடை பராமரிப்புத்துறை செயலர் அல்கா உபாத்யாயா, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பேசுகையில், ''நாட்டில் 53.6 கோடி கால்நடைகள் உள்ளன. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது,'' என்றார்.
பயிலரங்கை துவக்கி வைத்து, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை செயலர் கோபால் பேசியதாவது:
பால் மற்றும் முட்டை உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகள் கணக்கெடுப்பு, வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் உதவும். கால்நடைகள் கணக்கெடுப்பு, பல முக்கியமான தகவல்களை, அரசுக்கு வழங்குவதுடன், கொள்கை வகுப்பது, நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்கும் உதவிகரமாக அமையும்.
தமிழகத்தில் நடக்க உள்ள கணக்கெடுப்பில், 38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், 1,500 மேற்பார்வையாளர்கள், 6,700 கணக்கெடுப்பாளர்கள், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பல்வேறு கட்டமாக கண்காணிக்கப்படும். எவ்வித தவறும் இல்லாமல் இப்பணி நடக்க வேண்டும்.
இந்த ஆண்டு முதல், கால்நடை வளர்ப்போர் சமூகம் குறித்த தகவல்களும் திரட்டப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.