ADDED : ஏப் 16, 2024 10:18 PM
ஒரு குடும்பத்தின் ஆட்சியைத் தான், மன்னராட்சி என்று அழைப்போம். மன்னராட்சியின் மிகப்பெரிய குறையே, அதிகாரம் அனைத்தும் ஒரு குடும்பத்தினரிடம் இருப்பது தான். வேறு எவராலும் அதிகாரத்திற்கு வர முடியாது. இதுதானே உண்மை.
அப்படியெனில் தமிழகத்தில், தி.மு.க., வழங்கிக் கொண்டிருப்பது, மன்னராட்சி அல்லாமல் வேறென்ன? கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி என, கட்சியும், ஆட்சியும் ஒரே குடும்பத்தினரிடம் தான் இருக்கிறது. மன்னராட்சி பற்றி பேசுவதற்குக் கூட, இவர்களுக்கு தகுதி இருப்பது போல் தெரியவில்லை.
மத்தியில் கூட்டணி அரசு அமையும் போது, இவர்களின் நெருங்கிய உறவினர்கள் தான் பெரும்பாலும் அமைச்சர்களாகி இருக்கின்றனர். முரசொலி மாறன், தயாநிதி மாறன், மு.க.அழகிரி இவர்களெல்லாம் யார்? இந்த மன்னர் வம்ச உறவினர்கள் தானே!
'இண்டியா' கூட்டணியில் தலைமைக்கு வரத் துடிக்கும் காங்கிரசை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
நேரு - இந்திரா - ராஜிவ் - சோனியா வழிகாட்டுதல் ராகுல், தி.மு.க.,விலும் மூன்று தலைமை இங்கு மூன்று தலைமுறை முடிந்து, நான்காவது தலைமுறை ஆட்சிக் கட்டிலில் அமரத் துடித்துக் கொண்டிருக்கிறது.
இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் என அனைத்துமே, குடும்பக் கட்சிகள் தான். அதாவது மன்னராட்சிக்கு இலக்கணமானவர்கள்.
பா.ஜ. அப்படியல்ல. கட்சித் தலைமை வேறு; ஆட்சித் தலைமை வேறு. காங்கிரசில் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கட்சித் தலைமை மட்டும் மாறியுள்ளது.
பா.ஜ.,வில் உண்மை தொண்டர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். யார் வேண்டுமானாலும் கட்சியிலும், ஆட்சியிலும் உயர்ந்த பதவிகளை அடைய முடியும். யாரும் வர முடியும் எனும்போது, அதை எப்படி மன்னராட்சி என்று கூற முடியும்?
பா.ஜ., தமிழகத்திலும் வளர்ந்தால், இவர்களின் மன்னராட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த விரக்தியில் தான், கட்சியில் பொறுப்பான பதவியில் இருப்போரும், அமைச்சராய் இருப்போரும் கூட, வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். மன்னர் குடும்பத்தை திருப்திபடுத்தத் தான், இதெல்லாம் நடக்கிறது.
ஜனநாயகம் பற்றி பேசவும், இண்டியா கூட்டணிக்கு தகுதி கிடையாது.
ஏனெனில், சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது, இந்திரா ஆட்சியில் தான். எனவே மன்னராட்சி, ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு, தி.மு.க.,விற்கோ, காங்கிரசுக்கோ தகுதியே கிடையாது என்பது தான், நிதர்சனமான உண்மை!
- த.யாபேத் தாசன், வாசகர்

