25 வாகனங்களை ஒற்றை நபராக சேதப்படுத்திய 17 வயது சிறுவன்! நள்ளிரவில் சம்பவம்
25 வாகனங்களை ஒற்றை நபராக சேதப்படுத்திய 17 வயது சிறுவன்! நள்ளிரவில் சம்பவம்
ADDED : மார் 03, 2025 10:50 AM

மதுரை: மதுரை அருகே நள்ளிரவில் சிறுவன் ஒருவன் 25க்கும் மேற்பட்ட வாகனங்களை தனி ஆளாக சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு: செல்லூர் ஜம்பது அடி சாலையில் இருந்து கம்மாக்கரை சாலை வரை நள்ளிரவு நேரத்தில் ஆட்டோக்கள், பைக்குகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் அதன் உரிமையாளர்கள் இன்று (மார்ச்.3) வாகனங்களை எடுத்துச் செல்ல வந்தனர்.
அப்போது 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ந்தனர். இரவு நேரத்தில் எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று குழம்பிய அவர்கள், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஜே.சி.பி., இயந்திரத்தை கொண்டு 17 வயது சிறுவன் இயக்கி சேதப்படுத்தியது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து, அந்த சிறுவன் யார் என்று தேடி கண்டுபிடித்த போது அவர் போதையில் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். பின்னர் சிறுவனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பெற்றோரிடம் சண்டை போட்டுக் கொண்டு கோபத்தில் சிறுவன் இதுபோன்று செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், ஏதேனும் போதை வஸ்துகளை பயன்படுத்தி அதன் எதிரொலியாக இப்படி நடந்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.