'மகாவிஷ்ணு கைது வழக்கில் தமிழக அரசுக்கு குட்டு விழும்'
'மகாவிஷ்ணு கைது வழக்கில் தமிழக அரசுக்கு குட்டு விழும்'
ADDED : செப் 09, 2024 04:02 AM

பல்லடம்: “மகாவிஷ்ணு வழக்கு, ஐகோர்ட்டுக்கு செல்லும்போது, தமிழக அரசு குட்டுப்படுவது நிச்சயம்,” என, தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நாராயணன் திருப்பதி நேற்று கூறியதாவது: சென்னை அரசு பள்ளியில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை தான் அழைப்பு விடுத்துள்ளது. அவரை வைத்து எழுந்திருக்கும் சர்ச்சை முழுதுக்கும் அமைச்சர் மகேஷ் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் தவறு நடந்துள்ளது என, அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால், தவறுக்குப் பொறுப்பேற்று, அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இதை விடுத்து, ஆசிரியர்களை மாற்றம் செய்து, மகாவிஷ்ணுவை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் துக்ளக் ஆட்சி நடத்துகின்றனர். எப்படியும் இந்த வழக்கு ஐகோர்ட்டுக்கு செல்லும். ஏற்கனவே பல வழக்குகளில், ஐகோர்ட்டில் தமிழக அரசு குட்டுப்பட்டிருக்கிறது. மகாவிஷ்ணு மீதான வழக்கிலும் தமிழக அரசு, மிகக் காட்டமான விமர்சனங்களை ஐகோர்ட் வாயிலாக எதிர்கொள்ளும்.
அமைச்சர் மகேஷின் ஊரான, அன்பில் பகுதியில் பள்ளி முதல்வரின் மகன் ஒருவர், மருத்துவராக உள்ளார். இவர், அங்குள்ள பள்ளி குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை மறைக்கவே மகாவிஷ்ணு வழக்கைப் பரபரப்பாக்கி, அவரை பலிகடா ஆக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.