கிடைக்காத நீருக்கு பராமரிப்பு கட்டணம்: ஆந்திரா செல்லும் தமிழக அதிகாரிகள்
கிடைக்காத நீருக்கு பராமரிப்பு கட்டணம்: ஆந்திரா செல்லும் தமிழக அதிகாரிகள்
ADDED : மார் 03, 2025 06:32 AM

சென்னை : சென்னை குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நீர் பராமரிப்பு கட்டணத்தை செலுத்த, தமிழக அதிகாரிகள் ஆந்திரா செல்ல உள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்கு, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாயில் ஆந்திர மாநில அரசு விடுவிக்க வேண்டும். இந்த நீரை முறைப்படி வழங்குவது இல்லை.
கடந்த 2023 - 24ம் ஆண்டு, 2.41 டி.எம்.சி., 2024 - 25ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், 2 டி.எம்.சி., நீரை மட்டுமே ஆந்திர அரசு வழங்கி உள்ளது.
இந்த நீரை பெறுவதற்கு, ஆண்டுதோறும் பராமரிப்பு கட்டணமாக, தமிழக அரசு 10 கோடி ரூபாயை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், 4 டி.எம்.சி., நீர் கிடைக்க வேண்டும்.
இதுவரை, 2 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. எஞ்சியுள்ள 2 டி.எம்.சி., நீரை பெற்றால், சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.
எனவே, இந்த நீரை பெறுவதற்கான முயற்சிகளை நீர்வளத்துறை கையில் எடுத்து உள்ளது. இதற்காக, நீர்வளத்துறை அதிகாரிகள் குழுவினர், விரைவில் ஆந்திரா செல்ல உள்ளனர்.
அப்போது, நடப்பாண்டுக்கான பராமரிப்பு கட்டணத்தையும் செலுத்த இருப்பதாக சென்னை மண்டல நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.