மக்காச்சோள சாகுபடி திட்டம் டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பு
மக்காச்சோள சாகுபடி திட்டம் டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:49 AM

சென்னை: தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால், பயிர்கள் சாகுபடி நிலையற்றதாக உள்ளது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அதிகம் நீர் தேவைப்படுவதால், மாற்று பயிர்கள் சாகுபடியை, வேளாண் துறை ஊக்குவித்து வருகிறது.
நீர் தேவை குறைந்த மக்காச்சோளம் சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
மக்காச்சோளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதை கருத்தில் வைத்து, மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு திட்டத்தை வேளாண் துறை துவக்கியுள்ளது.
நடப்பாண்டு, 9.37 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 18 மாவட்டங்களில், 30 கோடி ரூபாய் மானியம் வழங்கும் சிறப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி காலம் நடைமுறையில் உள்ளது. நீர் பற்றாக்குறை காரணமாக, சாகுபடியை துவங்க முடியாத நிலையில், விவசாயிகள் உள்ளனர். மாற்று பயிராக மக்காச்சோளம் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இவர்களுக்கு மானிய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மக்காச்சோள சாகுபடி திட்டத்தை, டெல்டா மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:
டெல்டா மாவட்ட விவசாயிகள், மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வமாக உள்ளனர். மாற்று பயிர் சாகுபடி திட்டத்தில், மக்காச்சோள சாகுபடிக்கு மானிய உதவிகள் வழங்க வேண்டும் என எங்கள் சங்கம் சார்பில், பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்; இன்னும் நிறைவேறவில்லை.
நடப்பாண்டு தஞ்சாவூரில் மட்டும், 2,776 ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. திருவாரூரில், 24 ஏக்கர் மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. இது, விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திஉள்ளது.
நெல் சாகுபடி செய்து, அதை விற்பதற்கு கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இனியாவது, டெல்டா மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடிக்கு, சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

