ADDED : ஏப் 10, 2024 05:22 AM

சென்னை : தஞ்சாவூர் மாவட்டம், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் நிதியில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆலயம் காப்போம் என்ற சமூக அமைப்பை, ஆடிட்டர் ராமன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் செயல்பட்டு வருகிறார்.
இவர், தஞ்சாவூர் மாவட்டம், திட்டையில் உள்ள, வசிஷ்டேஸ்வரர் கோவில் நிதியில் இருந்து பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக, தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொன் மாணிக்கவேல் கூறியதாவது:
தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ், 34,119 கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
அறநிலையத்துறை, கோவில்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டது எனக்கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
ஒரு நாளைக்கு, 14 ரூபாய் வருமானம் வரக்கூடிய கோவில்களைக் கூட, இந்து அறநிலையத்துறை விட்டுவைக்கவில்லை. நிர்வாக வரியாக, 250 ரூபாய் வசூலித்து வருகிறது. இது கொள்ளைக்கு சமம்.
அத்துடன், அறநிலையத்துறை கமிஷனர், 'மீட்டிங்' நடத்தும் இடங்களில் எல்லாம், கோவில் நிதி சட்ட விரோதமாக திருடப்பட்டு உள்ளது. பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் நிதி திருட்டு தொடர்பாக, ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.
தஞ்சாவூர் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் நிதியில் இருந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய மீட்டிங்கிற்காக, 4,750 ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்து கோவில் சொத்துக்கள் அப்பட்டமாக திருடப்படுகின்றன.
இதுகுறித்து சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து, தவறு செய்த அதிகாரிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

