ADDED : ஜூலை 02, 2024 09:36 PM
சென்னை:'நீலகிரி தவிர மற்ற மாவட்டங்களில், வெப்பநிலை அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அவலாஞ்சி, 4; சின்னக்கல்லார், தேவாலா, ராசிபுரம், 3; கூடலுார் பஜார், 2; வால்பாறை, குந்தா, எமரால்டு 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில், வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரையில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென் மாவட்ட கடலோரம், மத்திய, தெற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய அரபிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள் ஆகியவற்றில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, வரும் 6ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.