கோவில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: வழக்கு முடித்து வைப்பு
கோவில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: வழக்கு முடித்து வைப்பு
ADDED : மார் 04, 2025 01:18 AM

தமிழக கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
'தமிழக கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்' என, 'ஹிந்து தர்மா' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ''ஹிந்து அறநிலைய துறைக்கு கீழ் உள்ள, 31,163 கோவில்களில், 11,982 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் முடிந்து விட்டது. 4,843 கோவில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு நியமன பணிகள் நடக்கின்றன.
''மற்ற கோவில்களில் அறங்காவலர் நியமனத்துக்கான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டும் விண்ணப்பங்கள் வரவில்லை. விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, தெரிவித்தார்.
அதை ஏற்று நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், 'இந்த விவகாரத்தில் ஏதேனும் கூடுதல் கோரிக்கை இருந்தால், மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று, தெரிவித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -