வயிற்றுப்போக்கு பாதிப்பை தடுக்க குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
வயிற்றுப்போக்கு பாதிப்பை தடுக்க குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 02, 2024 02:41 AM
சென்னை : “வயிற்று போக்கால் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்க, 58.33 லட்சம் குழந்தைகளுக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, அடையாறு கன்னிகாபுரத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில், குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் வைட்டமின் ஏ கரைசல் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வயிற்று போக்கு தடுப்பு முகாம்கள் ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளன. அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் முகாம்கள் நடைபெறும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு பிரதான காரணமாக வயிற்று போக்கு உள்ளது. இதை தடுக்கும் வகையில், 1.25 கோடி ரூபாயில், 45.31 லட்சம் ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
அதேபோல, 1.68 கோடி ரூபாயில், ஜிங்க் மாத்திரை கொள்முதல் செய்து, 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஒரு குழந்தைக்கு தலா 2 ஓ.ஆர்.எஸ்., கரைசல், ஜிங்க் மாத்திரை தலா 14 மாத்திரைகள் வழங்கப்படும்.
தமிழகத்தின் மக்கள் தொகையில், 7 சதவீதம் பேருக்கு கண்பார்வை இழப்பு பாதிப்பு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், ஆறு மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 52.13 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ கரைசல் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புக்காக, உலக வங்கியிடம், 3,000 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளோம். இந்த நிதி வாயிலாக, தொற்று மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து தெளிவுப்படுத்தியது தமிழகம் தான். நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதில் தீர்வு ஏற்பட்டால் தான், மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்க முடியும்.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.