ADDED : மே 30, 2024 02:20 AM
சென்னை:மருத்துவ உபகரணங்களுக்கான தர பரிசோதனைகளை, பி.ஐ.எஸ்., வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளும்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. போலி மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது போல, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
அதன்படி, உடலுக்கு வெளியே இருந்து பரிசோதிக்க பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, ஸ்கேன், எக்ஸ்ரே, தெர்மோமீட்டர் போன்ற, 'இன்-வைட்ரோ' உபகரணங்கள், பிற மருத்துவ கருவிகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மருத்து உபகரணங்களுக்கு, பி.ஐ.எஸ்., என்ற இந்திய தர நிர்ணய சான்று அவசியம். எனவே, மருத்துவ உபகரணங்கள், பி.ஐ.எஸ்., சான்றுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட வேண்டும். சில உற்பத்தியாளர்கள், பி.ஐ.எஸ்., வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்வாறு இல்லாமல், உரிய விதிகளின்படி, அனைத்து உபகரணங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். பி.ஐ.எஸ்., சான்று இல்லாத உபகரணங்களை கண்டறிந்து, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.