'பாலியல் தொந்தரவால் பெண்களுக்கு மனம், உடல் ரீதியாக பாதிப்பு'
'பாலியல் தொந்தரவால் பெண்களுக்கு மனம், உடல் ரீதியாக பாதிப்பு'
ADDED : ஜூன் 17, 2024 12:13 AM

சென்னை: 'பாலியல் தொந்தரவால், பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு, அதே அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் மோகனகிருஷ்ணன் என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.
பின், மோகனகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை, அந்த கமிட்டி பரிந்துரைத்தது. இதை எதிர்த்து, மோகனகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என்பது, நெறிபிரண்ட செயல். அது, மறைமுகமான சமூக பிரச்னைகளை உருவாக்குகிறது.
பாலியல் தொந்தரவால், பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால், பெண்கள் பணியில் இருந்து விலகுகின்றனர். பணியிடங்களில் பாலியல் தொந்தரவால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அது மட்டுமின்றி, அந்த நிறுவனங்களின் பணியாற்றலும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு, நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, மோகனகிருஷ்ணன் தரப்பில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே விசாகா குழு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பளித்து, மீண்டும் முறையாக விசாரித்து, இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மோகனகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு, நான்கு வாரங்களில் தண்டனை குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.