ADDED : ஜூலை 16, 2024 01:43 AM
தமிழகத்தில் பொறியியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங், வரும் 22ம் தேதி துவங்கி, செப்., 11 வரை நடக்க உள்ளது. இதில், மாணவர்கள் ஆன்லைன் வழியாக பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, 2 லட்சத்து 29,167 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு, 2 லட்சத்து 53,954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியான விண்ணப்பங்கள், 1 லட்சத்து 99,868. இதுவும் கடந்த ஆண்டை விட 21,000 அதிகம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
_____________
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2023ம் ஆண்டு வெளியான நுால்களுக்கு சிறந்த நுால் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கு, கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், உள்ளிட்ட, 33 வகை நுால்களை அனுப்பலாம். ஒவ்வொரு வகையிலும் ஒரு நுால், சிறந்த நுாலாக தேர்வு செய்யப்படும்.
நுாலாசிரியருக்கு 50,000 ரூபாய்; அதை பதிப்பித்த பதிப்பகத்துக்கு 25,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
_____________
தமிழக கவர்னர் ரவி, 2021 செப்., 18ல் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அப்பதவியில் நீட்டிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அவர் டில்லி சென்றுள்ளார்; 19ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து, மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
_____________
தமிழகத்தில், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 1 கோடியே 15 லட்சத்து 27,172 மகளிர், தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், மாதம் 1,000 ரூபாய் பெற்று வந்தனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில், 1.48 லட்சம் பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இம்மாதம் முதல் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
_____________
'இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு சர்க்கரை குறைபாடு வருவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, மாணவர்களுக்கான உணவில் ஆரோக்கியம் பேண வேண்டும்.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் உணவகங்களில், உடல் நலத்தைக் கெடுக்கும் ஆரோக்கியமற்ற உணவு விற்பனை கூடாது. இதை, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

