ADDED : மே 30, 2024 11:33 PM
அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பதவிகளில், 3,192 காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியே போட்டி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஒரு பதவிக்கு, 1:1.25 என்ற விகிதத்தில், 3,761 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று துவங்கியது; ஜூன் 2 வரை நடத்தப்படும். சென்னை கிறிஸ்துவ கல்லுாரி மேல்நிலை பள்ளி உட்பட நான்கு கல்லுாரிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட உள்ளது.
பட்டதாரிகள் வேலைக்கு செல்லும் போது, படித்த பல்கலை மற்றும் கல்லுாரிகளில், உண்மைத்தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் உண்மைத்தன்மை சான்றிதழுக்கு, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு, 2024 - 25ம் கல்வி ஆண்டுக்கான இணையவழி பொது கலந்தாய்வு, வரும் 10ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை, 10:00 மணிக்கு, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கும். பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.