ADDED : பிப் 25, 2025 06:32 AM

சென்னை : 'வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில், பிப்ரவரி, 28 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை காணப்படும். காலை நேரத்தில், லேசான பனிமூட்டம் இருக்கும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், நாளை ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும், 28ல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து, மார்ச், 1ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் காலை லேசான பனிப்பொழிவு காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.