கள்ளச்சாராய இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்
கள்ளச்சாராய இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்
ADDED : ஜூலை 05, 2024 01:26 AM

பண்ருட்டி:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்குக் காரணமான மெத்தனால், பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கி வைத்து, கடத்திச் சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து, பெட்ரோல் பங்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பூட்டி, தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில், கடந்த 18ம் தேதி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து, 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 65 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிக போதைக்காக சாராயத்தில், மெத்தனால் கலந்ததால் இறப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில், மெத்தனால் சப்ளையர்கள் மடுகரை மாதேஷ், 19, சென்னை சிவகுமார், 39, பன்ஷிலால், 32, கவுதம்சந்த்,50, சக்திவேல் ஆகிய 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோர்ட் அனுமதி பெற்று 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதில் மடுகரை மாதேஷிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், சென்னையில் உரிமம் பெற்ற மெத்தனால் சப்ளையர்கள் சென்னை சிவகுமார், 39, பன்ஷிலால், 32, கவுதம்சந்த், 50, ஆகியோரிடம் எவ்வித உரிமம் இல்லாமலே மாதேஷ் மொத்தமாக மெத்தனால் வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்ததும், இதற்காக கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரில், இயங்காமல் உள்ள எஸ்ஸார் பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து, அங்குள்ள பெட்ரோல் டேங்கரில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வீரப்பெருமாநல்லுாரில் உள்ள பெட்ரோல் பங்கில் அதிரடியாக சோதனை நடத்தி, டேங்கரில் இருந்த மெத்தனாலை மாதிரிக்கு எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, பெட்ரோல் பங்க் டேங்கரை பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.