இடம்பெயர்ந்த சிறுத்தை: தேடுதல் பணியில் வனத்துறையினர்!
இடம்பெயர்ந்த சிறுத்தை: தேடுதல் பணியில் வனத்துறையினர்!
ADDED : ஏப் 09, 2024 11:16 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒரு வாரமாக பிடிபடாத நிலையில் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலத்தை அடுத்த காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்து, தீவிர தேடுதல் வேட்டையை அப்பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது: மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் ஊராட்சிகளில் கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால், அருகிலுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் மூலமாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

