ரூ.100 கோடியில் 36 பதிவு அலுவலகங்கள் அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
ரூ.100 கோடியில் 36 பதிவு அலுவலகங்கள் அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
ADDED : ஜூன் 27, 2024 02:03 AM
சென்னை:''பதிவுத் துறைக்கு 100 கோடி ரூபாயில், 36 புதிய பதிவுத்துறை அலுவலகங்கள் கட்டப்படும்,'' என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
வணிக வரித் துறை அலுவலக பணி செயல்பாடுகள் 5.48 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். வணிக வரித் துறையில் உள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்களில், கணினி வழி பயிற்சி வழங்க தேவையான கணினி உபகரணங்கள் 4.93 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்
கடலுார் ஒருங்கிணைந்த வணிக வரி கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் 23 கோடி ரூபாயில் கட்டப்படும்
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட, 15 அலுவலகங்களுக்கு, புதிய ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டடம், 22 கோடி ரூபாயில் கட்டப்படும். சேலம் நுண்ணறிவு கோட்டத்திற்கு, 9.84 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படும்
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட, மூன்று வரி விதிப்பு வட்டங்களுக்கு, ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகம், 6 கோடி ரூபாயில் கட்டப்படும்
மதுரை மற்றும் தேனியில் புதிய வணிக வரி அலுவலகம், தலா 6.30 கோடி ரூபாயில் கட்டப்படும். விருதுநகர் கோட்ட ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டடத்தில், கூடுதல் தளங்கள் 4.60 கோடி ரூபாயில் கட்டப்படும்
காஞ்சிபுரத்தில் புதிய ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டடம், 4.20 கோடி ரூபாயில் கட்டப்படும்.
பதிவுத்துறை
பதிவுத் துறைக்கு 100 கோடி ரூபாயில், 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்
கும்பகோணம், விருத்தாசலம் பதிவு மாவட்டங்களில், மாவட்டப் பதிவாளர் தணிக்கை பணி அமைப்புகள் உருவாக்கப்படும்
புதிதாக ஏழு சார் - பதிவாளர் அலுவலகங்கள் உருவாக்கப்படும்
அரசு கட்டடங்களில் இயங்கி வரும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், நடப்பாண்டு 25 அலுவலகங்களில் கட்டமைப்புகள் நவீனப் படுத்தப்படும்
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில், பதிவுத் துறைக்கு நவீன கூட்ட அரங்கம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.