ADDED : ஆக 22, 2024 04:25 AM

சென்னை: 'வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நகர்ந்துள்ளதால், ஆக., 27 வரை, ஒருசில இடங்களில் மிதமான மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
குமரி கடல் உள்ளிட்ட பகுதிகளின் மீது வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது காரணமாக, கன்னியாகுமரி முதல் சேலம் வரையிலான மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை பெய்தது. தற்போது கீழடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் இருந்து நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் பின், ஆக., 27 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.