நியாயமானதை கூட மத்திய அரசு தாமதிக்கிறது எம்.பி., திருச்சி சிவா குற்றச்சாட்டு
நியாயமானதை கூட மத்திய அரசு தாமதிக்கிறது எம்.பி., திருச்சி சிவா குற்றச்சாட்டு
ADDED : ஆக 30, 2024 09:15 PM

கோவை,:கோவை விமான நிலையத்தில் தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது:
திருச்சியில் என்.ஐ.டி., கல்லுாரி வளாகத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு நியாயமாக தரக்கூடியதை கூட தாமதிக்கின்றனர். ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கக்கூடாது.
தமிழகம் மிக சிறப்பாக செயல்படக்கூடிய மாநிலம். மக்கள் தொகை கட்டுப்பாடு, வறுமை ஒழிப்பு என, பல துறைகளில் முன்னிலை வகிக்கிறோம். வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பல வகைகளில் முன்னிலையில் இருக்கிறோம்.
மாற்றுக் கட்சி என்ற மனநிலையுடன் மத்திய அரசு தமிழக அரசை பார்க்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கோல்கட்டா விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை காட்டுவதில் குறை கூறவில்லை. ஆனால், மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்துச் சென்றது, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டது குறித்தெல்லாம் பிரதமர் கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை.
நாட்டு மக்கள் தான் மத்திய அரசின் செயல்பாடுகளை பார்த்து எடை போட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, ஒரு கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும். அந்த வகையில் தான் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற மாநாட்டை பார்க்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் கட்சி ஆரம்பிக்கும் உரிமை உண்டு. தமிழகத்திற்கு மத்திய அரசுடன் பிரச்னை இல்லை. கடமைகளை செய்ய உரிமைகளை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.