ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர் பதிவுகள்: வாக்காளர் பட்டியலில் நீக்கும் பணி தீவிரம்
ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர் பதிவுகள்: வாக்காளர் பட்டியலில் நீக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 03, 2024 01:07 AM

சென்னை: வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும்படி, வீடு வீடாக சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும். இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி, கடந்த மாதம் 20ம் தேதி துவக்கப்பட்டது.
இப்பணி, அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள், அந்த முகவரியில் வசிக்கின்றனரா என்பதை சரி பார்க்கின்றனர். அத்துடன் இறந்தவர்கள் பெயர், இடம் மாறி சென்றவர்கள் பெயர், புதிதாக வந்தவர்கள் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளதா என்ற விபரத்தையும் சேகரிக்கின்றனர்.
இது தவிர, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர் விபரம், கணினி வழியாகவும் சேகரிக்கப்படுகிறது. அதன்பின், அவர்கள் எந்த இடத்தில் பெயர் நீடிக்க விரும்புகின்றனர் என்று விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.
அவர்கள், 15 நாட்ளுக்குள் பதில் அனுப்ப வேண்டும். அந்த பதில் அடிப்படையில், ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் உள்ள பெயர் நீக்கப்படும். நோட்டீசுக்கு பதில் அளிக்காதவர்களின் வீடுகளுக்கு, ஓட்டுச் சாவடி அலுவலர்கள் சென்று, அவர்கள் விரும்பும் இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள பெயர்களை நீக்குவர்.
அடுத்த மாதம், 19 முதல் 28 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும். அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் நவ., 28 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு ஜன., 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.