ADDED : ஆக 29, 2024 12:04 AM

சென்னை:தமிழகத்தில், உண்ணக்கூடிய காளான் வளர்ப்பு, வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சமீப காலமாக காளான், முக்கிய உணவுப் பொருளாக மாறி உள்ளது. அதன் தேவை அதிகரித்துள்ளதால், காளான் வளர்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பல்வேறு மத்திய, மாநில வேளாண் அமைப்புகள், உண்ணக்கூடிய காளான் வகைகளை, காய்கறிகளுடன் ஒப்பிட்டுள்ளன. நிலமற்ற விவசாயிகளும், காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சத்துகள் நிறைந்த, உண்ணக்கூடிய வகையைச் சேர்ந்த, வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்றவற்றை வளர்ப்பதை, வேளாண் தொழிலாகக் கருதி, வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டுவர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் காளான் வளர்ப்போர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக்காளான் வகைகளை வளர்ப்பது, வேளாண் சாகுபடி கீழ் கொண்டு வரப்படுவதாக, வேளாண் துறை செயலர் அபூர்வா அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதன் விபரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விவசாயத்திற்கு கிடைக்கும் அரசின் அனைத்து விதமான மானிய உதவிகளும், காளான் வளர்ப்புக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

