நீட் தேர்வு இருக்கணும்; மாற்றுக் கருத்து இல்லை: அண்ணாமலை பேட்டி
நீட் தேர்வு இருக்கணும்; மாற்றுக் கருத்து இல்லை: அண்ணாமலை பேட்டி
ADDED : ஜூலை 15, 2024 12:08 PM

சேலம்: 'நீட் தேர்வு இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை' என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில், காமராஜர் திருவுருவ படத்திற்கு தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது. காமராஜர் ஆட்சிக்கு நிகராக, மத்தியில் மோடி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
நீட் தேர்வு
தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில், அண்ணாமலை கூறியதாவது: காலை உணவுத்திட்டத்தை திராவிட மாடல் எனக் கூற முடியாது. மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். நீட் தேர்வு இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது.
தேர்வு குளறுபடிகளை ஆய்வு செய்து, மத்திய அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறது. இந்தாண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏழை, நடுத்தர மக்களுக்கு நீட் தேர்வு உதவுகிறது.
கூலிப்படை
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய மாணவர் சேர்க்கை தரவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூலிப்படையை ஏவி விட்டது யார்?.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. திருவேங்கடம் குற்றவாளி தான். அவரது பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதே கேள்வி. இவ்வாறு அவர் கூறினார்.