ரூ.25 லட்சம் மதிப்பு திமிங்கல எச்சம் விற்க முயன்ற நாகை மீனவர் கைது
ரூ.25 லட்சம் மதிப்பு திமிங்கல எச்சம் விற்க முயன்ற நாகை மீனவர் கைது
ADDED : மே 10, 2024 04:24 AM

திருவொற்றியூர் : எண்ணுார், நேதாஜி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, எண்ணுார் போலீசார் ஜெகதீஸ்வரன், லோகநாதன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.
பறிமுதல்
சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், மினுமினுக்கும் தன்மையுடன், திமிங்கல எச்சம் இருந்துள்ளது.
விசாரணையில், பிடிபட்ட நபர் நாகை மாவட்டம், சம்மந்தன்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன், 33, என்பதும், மீனவரான இவர், ஒரு வாரத்திற்கு முன் நாகப்பட்டினத்தில் தன் பைபர் படகில் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற போது, வலையில் சிக்கிய திமிங்கல எச்சத்தை எடுத்து, விற்பனை செய்வதற்காக சென்னை வந்தது தெரிய வந்தது.
இதற்காக, எண்ணுார், சுனாமி குடியிருப்பில் உள்ள அவரது அத்தை முத்துலட்சுமி என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூரில் உள்ள உறவினர் சோபன் என்பவரை பார்த்து விட்டு, நேதாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது பிடிபட்டுள்ளார்.
போலீசார் சிலம்பரசனை பிடித்து, வேளச்சேரி வனத்துறையினரிடம் நேற்று ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 25 லட்ச ரூபாய் மதிப்பிலான, 800 கிராம் திமிங்கல எச்சமும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்டவிரோதம்
திமிங்கல எச்சம் எனும் அம்பர்கிரிஸ் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பாலியல் மருந்து தயாரிக்கவும், அரபு நாடுகளில் உயர்தரமான வாசனை திரவியங்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், அதிக பணத்திற்காக சட்டவிரோதமாக குறிப்பிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இதையடுத்து, நம் நாட்டில் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ், திமிங்கல எச்சம் உள்ளிட்ட அவற்றின் உறுப்புகளை வர்த்தகம் செய்வதுசட்டவிரோதமானது என, சட்டம் கொண்டு வரப்பட்டது. விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.