நாகையின் வரலாற்று சின்னமான சர்ச் 1 கோடி ரூபாயில் புதுப்பொலிவு
நாகையின் வரலாற்று சின்னமான சர்ச் 1 கோடி ரூபாயில் புதுப்பொலிவு
ADDED : மே 30, 2024 02:24 AM

நாகப்பட்டினம்:டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் நாகை இருந்த போது, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 1774ம் ஆண்டு, துாய பேதுரு சர்ச் கட்டப்பட்டது. 250 ஆண்டுகள் பழமையான இந்த சர்ச், டச்சுக்காரர்களின வரலாற்றுச்சுவடாக, நாகையின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சூரிய ஒளியால் சுட்ட செங்கற்கள், சுண்ணாம்பு பூச்சு, தேக்கு மர கலை நயத்திலான உயர் மாடங்கள், தேக்கு மரத்திலான துாண்கள், உத்திரங்கள், வழுவழுப்பான தரை, ஓடுகளால் வேயப்பட்ட கூரை என, 400 அடி நீளம், 250 அடி அகலத்தில், தெற்கு நோக்கி டச்சு பாரம்பரிய கட்டடக்கலைக்கு சான்றாக இந்த சர்ச் அமைந்துள்ளது.
சர்ச்சுக்குள் தேக்கு மரத்திலான திருப்பலி மேடை, ஞான ஸ்நான தொட்டி, இசைக்கலைஞர்களுக்கு தனி மேடை, பிரமாண்டமான ஹேண்ட் ஆர்கன், தேக்கு மர இருக்கைகள் மற்றும் மர சிற்பங்கள், டச்சு நாட்டு அதிகாரிகளின் நினைவு கேடயங்கள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.
பல்வேறு காலகட்டங்களில் இயற்கை சீற்றங்களால் இந்த வரலாற்று சின்னம் ஆங்காங்கே சேதமடைந்து, சுவர்களில் விரிசல் விழுந்தது. அதையடுத்து, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சர்ச்சை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்தாண்டு துவங்கியது.
பணிகள் நிறைவடைந்து நேற்று அந்த சர்ச்சை, சி.எஸ்.ஐ., தென்னிந்திய திருச்சபை பேராயர் சந்திரசேகரன் திறந்து வைத்தார். திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ரோஸலிண்ட் சந்திரசேகரன் விளக்கேற்றினார். தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடந்தது.