நாஞ்சில் நாடனை கொண்டாடுங்கள்;விருது விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் புகழாரம்
நாஞ்சில் நாடனை கொண்டாடுங்கள்;விருது விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் புகழாரம்
UPDATED : செப் 15, 2024 09:04 PM
ADDED : செப் 15, 2024 08:53 PM

கோவை: நாஞ்சில் நாடனுக்கே ஒரு கழகம் ஆரம்பித்து, அவருடைய படைப்புகளை படிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் 2024ம் ஆண்டுக்கான கி.ரா., விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டது. கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியின் 'டி' அரங்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் பேசியதாவது: 2000 ஆண்டுக்கு முன்பே தோன்றி விட்ட தமிழ் மொழியின் கலாசாரம், பண்பாட்டின் தன்மைகளை உணர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடன். இந்தக் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மறந்து விட்டு, அவர்களின் பயணம் எந்த திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று எழுதி காட்டியவர். மண்ணுக்கான எழுத்துக்களை சேகரித்து, படைப்புக்களை உருவாக்குகிறார். நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளியை கொண்டாடுங்கள். அவரதுu படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.
கம்பன் கழங்கள் பார்த்து அதன் கட்டுரை வீச்சை உள்வாங்கி, நாஞ்சில் நாடனை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால், வாழ்வின் உண்மையையும், தாக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
துறவு எனக் கனவு கண்டால் துறவு வந்து விடுமா? ஒன்றும் வேண்டாம் என்று தூக்கி எரிந்து விட்டு, ஒருகணத்திலே போனால் அதுதான் துறவு என்றார். இந்தப் படைப்பாளியை எப்படி நாம் கொண்டாடுவது. தமிழுக்காகவா, பாரம்பரியத்திற்காகவா? மண்ணுக்காகவா? மண் சார்ந்த கலாசாரத்தைக் கொண்ட தன்மைக்காவா? நாஞ்சில் நாடனுக்கே ஒரு கழகம் ஆரம்பித்து, அவருடைய படைப்புகளை படிக்க வேண்டும்.
தமிழை உணர்ந்து விட்ட படைப்பாளி நாஞ்சில் நாடன். உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டியவர். 2 வரிகளில் அவர் சொன்னதை 2 ஆயிரம் வரிகளில் கட்டுரையாக்க முடியும். வள்ளுவரின் ஒரு குறளுக்கு எத்தனை கட்டுரைகளை எழுத முடியும். அதற்கு சற்றும் குறைவில்லாதது நாஞ்சில் நாடன் பயணப்பட்டு வந்த பாதை. தமிழை உணர்ந்த படைப்பாளி. தமிழ் பாடலுக்கு இணையாக வேறு எந்த மொழி பாடலும் கிடையாது என்று உணர்த்தியவர்.
150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 10க்கும் அதிகமான சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், கணக்கில் அடங்காத படைப்புகளை உருவாக்கிய படைப்பாளி தான் நாஞ்சில் நாடன், எனக் கூறினார்.