ADDED : ஜூலை 31, 2024 09:40 PM
சென்னை:உடல்நல குறைவால், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 74, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி மற்றும் 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, துாத்துக்குடி, நாமக்கல் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில்,நடந்தது.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார். அப்போது, உடல்நல குறைவு ஏற்பட்டதால், கூட்டத்தில் இருந்து வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பின், டாக்டர்களின் ஆலோசனைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதால், அவருக்கு தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.