நினைவுச் சின்ன கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற வழக்கு: தீர்வு கோரும் உயர்நீதிமன்றம்
நினைவுச் சின்ன கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற வழக்கு: தீர்வு கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஜூலை 05, 2024 11:20 PM

மதுரை: கன்னியாகுமரி 'ஜீரோ பாயின்ட்'டில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்ன கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற தீர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாகர்கோவில் விஜய்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
நான் 2016 ஜூன் 30 முதல் 2022 ஜூன் 29 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தேன். எம்.பி.,தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சத்தில் கன்னியாகுமரி 'ஜீரோ பாயின்ட்' இடத்தில் 147 அடி உயர தேசியக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் 2022 ஜூன் 29 ல் துவக்கி வைத்தார். இது நினைவுச் சின்னமாகும். 24 மணி நேரமும் கம்பத்தில் தேசியக் கொடி பறக்க வேண்டும்.
டில்லி முதல் கவுகாத்தி வரை பொது பூங்காக்கள், ரயில், விமான நிலையங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் உலகின் மிக உயரமான தேசியக் கொடிக் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட 148 அடி உயர நினைவுச் சின்ன கொடிக் கம்பம் பராமரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியாவின் தென் கோடியிலுள்ள கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்வோர் காணும் வகையில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடியை இறக்கி பல வாரங்கள் கடந்துவிட்டது. கடலோர வானிலை காரணமாக கொடி சேதமடைந்ததாக கூறுகின்றனர். மாற்று கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: கடலோர வானிலை காரணமாக தேசியக் கொடி சேதமடைந்ததாக அரசு தரப்பு கூறுகிறது. மாற்றுக் கொடியை ஏற்ற தீர்வு குறித்து கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.