ராமேஸ்வரம் கோவிலில் நவாஸ்கனி தரிசனம்: விபூதியை அழித்ததாக வி.ஹெச்.பி., கண்டனம்
ராமேஸ்வரம் கோவிலில் நவாஸ்கனி தரிசனம்: விபூதியை அழித்ததாக வி.ஹெச்.பி., கண்டனம்
ADDED : மார் 28, 2024 05:25 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தரிசனம் செய்தார். அவர் விபூதியை அழித்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 'சிட்டிங்' எம்.பி., நவாஸ்கனி மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று ராமேஸ்வரத்தில் பிரசாரத்தை துவக்கினார். அவருடன் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, நிர்வாகிகள் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்தனர்.
சுவாமி சன்னிதியில் குருக்கள் வழங்கிய தீர்த்தத்தை கையில் தேய்த்துக் கொண்டார். அமைச்சர், எம்.எல்.ஏ., தீர்த்தத்தை பருகி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சன்னிதியை கடந்து சென்றபின், நவாஸ்கனி நெற்றியில் இருந்த விபூதியை அழித்துக் கொண்டார். இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஆ.சரவணன் கூறியதாவது:
கொடி மரத்தை தாண்டி வரும் வேறு மதத்தினர் ஹிந்து சடங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். அவர் விபூதி, குங்குமத்தை நெற்றியில் இருந்து அழித்தது கடும் கண்டனத்திற்குரியது. கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

