ADDED : ஜூலை 02, 2024 02:32 AM

சென்னை : என்.சி.சி., என்ற தேசிய மாணவர் படையின் தலைமை அதிகாரியாக கமடோர் எஸ்.ராகவ் பொறுப்பேற்றார்.
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் பிராந்திய தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனர லாக இருந்த அதுல் குமார் ரஸ்தோகி நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில், கமடோர் எஸ்.ராகவ் நேற்று பொறுப்பேற்றார்.
இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்று, ஊட்டி வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லுாரியில் பட்டம் பெற்றார். கோவா கடற்படை கல்லுாரியில் உயர்கல்வி கற்றார்.
கடந்த 1993ல் இந்திய கடற்படையில் பணியில் சேர்ந்தார். நீர்மூழ்கி கப்பல்கள், கிலோ கிளாஸ் பிரிவு நீர்மூழ்கி கப்பல்களில் பணி அனுபவம் பெற்றவர்.
ஐ.என்.எஸ்., ராஜ்புத்தின் கடைசி சேவை வரை தலைமை அதிகாரி யாக பணியாற்றியவர். தமிழகம், புதுச்சேரி கடற்படை பகுதியின் தலைமை பணியாளர் அதிகாரியாக இருந்த இவர், தற்போது தேசிய மாணவர் படையின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.