ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு
ஜாபர் சாதிக் கூட்டாளியின் சொத்துக்கள் வங்கி கணக்குகளை என்.சி.பி., ஆய்வு
ADDED : ஏப் 12, 2024 05:45 AM

சென்னை : திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜாபர்சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவருமான ஜாபர் சாதிக், 35, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான திரைப்பட இயக்குனர் அமீரிடம், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி முடித்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பியதுடன், சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அப்துல் பாஷித் புஹாரி என்பவரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மார்க்க நெறியாளராக வலம் வரும் அப்துல் பாஷித் புஹாரியை, ஜாபர் சாதிக்கிற்கு அமீர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அமீர் மற்றும் ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து அப்துல் பாஷித் புஹாரி, 'ஜூகோ ஓவர்சீஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, இரண்டு முறை, 18 லட்சம்ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்துஉள்ளனர். அதேபோல, 4 ஏ.எம்., என்ற கடையையும் அப்துல் பாஷித் புஹாரி நடத்தி வருகிறார். இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல தான், ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். அப்துல் பாஷித் புஹாரி பணம் முதலீடு செய்துள்ள ஜூகோ ஓவர்சீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தி உள்ளனர். இரண்டு முறை மட்டுமே பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால், இந்த நிறுவனம் மீது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இந்த நிறுவனமும், போதை பொருள் கடத்தலுக்காக துவங்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஜாபர் சாதிக், அமீர் மற்றும் அப்துல் பாஷித் புஹாரி கூட்டணியின் செயல்பாடுகள் அனைத்தையும் விசாரித்து வருகிறோம். அப்துல் பாஷித் புஹாரியின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இவரின் பின்னணியில் ஜாபர் சாதிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் பாஷித் புஹாரியிடம் நேரடி விசாரணை நடக்க உள்ளது' என்றனர்.

