அ.தி.மு.க., பேனர்களில் புகைப்படங்கள் சைஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புது கட்டுப்பாடு
அ.தி.மு.க., பேனர்களில் புகைப்படங்கள் சைஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புது கட்டுப்பாடு
ADDED : மார் 02, 2025 06:26 AM

கோவை: அ.தி.மு.க., சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்படும் பேனர்களில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் எந்தெந்த சைஸில் இருக்க வேண்டுமென்கிற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியதற்காக, கடந்த மாத துவக்கத்தில், கோவை மாவட்டம் அன்னுாரில், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அதற்கான அழைப்பிதழிலும், மேடையிலும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெ., புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதனால், அ.தி.மு.க.,வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்களில், பழனிசாமியை கட்சியின் பொது செயலாளர் என்றே செங்கோட்டையன் குறிப்பிடுகிறார்; பெயரை குறிப்பிடுவதில்லை. ஈரோட்டில் நடந்த விழா மேடையில், பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையன் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
பொதுக்கூட்ட மேடைகளில், தன்னுடைய அனுபவத்தையும், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,வுடனான நெருக்கத்தையும் தவறாமல் செங்கோட்டையன் பதிவு செய்கிறார். இது, கட்சிக்குள் பேசும் பொருளானது.
செங்கோட்டையன் செயல்படும் விதம், அவரது பேச்சு குறித்து, கட்சியின் பொது செயலாளரான பழனிசாமி பதிலளிக்கவில்லை; கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதேநேரம், பழனிசாமிக்கு நிகராக, செங்கோட்டையன் படம் அச்சிடுவது, நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கும்போது, நிர்வாகிகளின் புகைப்படங்களை எந்தெந்த சைஸில் அச்சிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.