ADDED : ஏப் 02, 2024 03:46 AM

சென்னை: பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, விசாரணைக்கு ஆஜராகாத நபர்களை கைது செய்ய, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, அம்மாநிலத்தை சேர்ந்த முஸவீர் ஷுசைன் ஷாகிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இவர்களின் கூட்டாளி முஸாமில் ஷெரீப்பை கைது செய்தனர். குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கர்நாடகாவில், 12, தமிழகத்தில் 5, உ.பி.,யில் ஒன்று என, 18 இடங்களில் சோதனை நடத்தி, மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றை ஆய்வு செய்த போது, குற்றவாளிகள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் ரகசிய கூட்டங்கள் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த லியாகத் அலி உட்பட மூவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல் மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்து விசாரிக்க, என்.ஐ.ஏ., தனிப்படை அதிகாரிகள், ராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

