ADDED : ஜூலை 24, 2024 05:15 AM

சென்னை: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில், அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இதுகுறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய வன உயிரின வாரியம் ஆகியவற்றிடம், கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா' என்று கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதன்படி, தீர்ப்பாயத்தில் கேரள நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கை:
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை.
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், வட்டவடா ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் வழங்க, சிலந்தி ஆற்றின் குறுக்கே, 'வெயிர்' அணை, அதாவது 1 மீட்டர் உயரத்தில் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது.
குடிநீர் தேவைகளுக்காக சிறிய அளவில் தடுப்புகளை ஏற்படுத்த, சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை. இதனால், அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் செல்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே நடக்கும் கட்டுமான பணிகளின் படங்களையும், கேரள நீர்வள ஆணையம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.