UPDATED : ஜூலை 02, 2024 10:02 PM
ADDED : ஜூலை 02, 2024 08:21 PM

மதுரை;மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் அரசியல் உள்நோக்கம் இல்லை ; திட்டமிட்டபடியே கட்டுமான பணிகள் நடக்கிறது என மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2024 மே 21 ம் தேதி எல் அன்ட் டி நிறுவனம் மூலம் அதிகாரப்பூர்வ கட்டுமான பணிகள் துவங்கின. முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி உள்ளிட்டவை 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் மொத்த கட்டுமானமும் 33 மாதங்களில் முடிக்கப்படும் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.
கட்டுமான பணிகள் தாமதமானதால் 2021-22 கல்வியாண்டு முதல் தற்போது வரை ஆண்டுக்கு 50 பேர் வீதம் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக பயில்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக மதுரை திருமங்கலம் அருகே வாடகை கல்லூரி வளாகம் கேட்டு கடந்த ஜனவரியில் எய்ம்ஸ் நிர்வாகம் விளம்பரம்வெளியிட்டது.
சமீபத்தில் விடுதிக்கும் வாடகை கட்டடம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டது. ஓராண்டுக்கு ஒப்பந்தம் எனவும் தேவைப்பட்டால் மேலும் நீட்டித்துக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவமனை கட்டுமான பணிகள் மீண்டும் தாமதமாகும் என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுப்பியது எழுந்தது.
இது குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை.ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கல்வியை தொடர்வதில் மாணவர்கள் முழு திருப்தியுடன் உள்ளனர். மாணவர்களுக்கு அதிருப்தி இருப்பதாக வெளியான செய்தி தவறு.திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் இடையூறின்றி நடைபெறுவதாகதெரிவித்துள்ளது.