'காசு கொடுத்தா கவுன்சிலிங் வேண்டாம்'; செவிலியர் பணி மாறுதலில் புரளும் பணம்
'காசு கொடுத்தா கவுன்சிலிங் வேண்டாம்'; செவிலியர் பணி மாறுதலில் புரளும் பணம்
ADDED : ஜூலை 21, 2024 05:04 AM

சென்னை: பணிமூப்பு குறைவாக உள்ள செவிலியர்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்குவதாக, அனைத்து செவிலியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலுார், நாகை ஆகிய மாவட்டங்களில், 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் புதிதாக துவங்கப்பட்டன.
இங்கு, நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில், பொது கவுன்சிலிங் நடத்தாமல், செவிலியர்களுக்கு தன்னிசையாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முறைகேடு
தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் பால் பாண்டியன் கூறியதாவது:
காலி இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் காத்திருக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு, கவுன்சிலிங் வாயிலாக பணியிட மாறுதல் நடத்திய பின் தான், தேர்வு செய்யப்பட்ட எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு பணியிட மாற்ற கவுன்சலிங் நடத்த வேண்டும்.
ஆனால், விதிகளைப் பின்பற்றாமல், பணிமூப்பு குறைவாக உள்ள செவிலியர்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விருதுநகர், திண்டுக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, இதுவரை கவுன்சிலிங் நடத்தாமல், முறைகேடாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
இடைத்தரகர்கள்
அதேபோல், பிப்., மார்ச் மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டதால் உருவான, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தாமல், பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. சில சங்கங்கள், இடைத்தரகர்கள், செவிலியர்களிடம் விலை பேசி பணம் பெற்று, இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்களை, பணிமூப்பு அடிப்படையில் காத்திருக்கும் செவிலியர்களுக்கு பொது கவுன்சிலிங் வாயிலாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு கூறினார்.