ADDED : ஜூலை 26, 2024 06:21 AM

சென்னை : 'தமிழகத்தில், ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையப்படுத்துவதில் எந்த தாமதமும் இல்லை' என வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலம் எடுப்பதில், மாநில அரசு தாமதம் செய்வதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து, தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, ரயில்வே திட்டத்திற்காக, 2,443 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை, எந்த தடையுமின்றி அரசாணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகளுடன் மாதந்தோறும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலரும் ஆய்வு நடத்துகிறார். எனவே, தமிழக அரசு கால தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

