15 ஆண்டாக குடிநீர் இல்லையா? ஆய்வில் இறங்கிய வாரியம்!
15 ஆண்டாக குடிநீர் இல்லையா? ஆய்வில் இறங்கிய வாரியம்!
ADDED : மே 30, 2024 01:34 AM
சென்னை:பதினைந்து ஆண்டுகளாக குடிநீர் கிடைக்காமல், பழங்கானக்குடி ஊராட்சியில் உள்ள ஆறு கிராம மக்கள் தவிப்பதாக வெளியான தகவலை அடுத்து, ஒரே நாளில் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது, தமிழக குடிநீர் வடிகால் வாரியம்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த தேனேரிப்பட்டி கிராமத்தில், 15 ஆண்டுகளாக காவிரி குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 'போர்வெல்' நீர் குடிப்பதால், கல் அடைப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைவதாகவும், சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் இரவு தகவல் பரவியது.
இது, தமிழக குடிநீர் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி கவனத்திற்கு சென்றது. உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, திருச்சி மாவட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து, குடிநீர் வாரிய அதிகாரிகள், அங்குள்ள நிலவரங்களை ஆய்வு செய்து, ஒரே நாளில் அறிக்கை அனுப்பி உள்ளனர்.
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து, பழங்கானக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட, ஆறு கிராம குடியிருப்புகளுக்கு, பூலாங்குடியில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும், 3.52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, நகர பகுதிகளை ஒட்டி வளர்ச்சி அடைந்து வரும் பூலாங்குடிக்கும் கூடுதல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்கானங்குடி ஊராட்சியில் உள்ள தேனேரிப்பட்டி கிராமத்திற்கு, 15 ஆண்டுகளாக உள்ளூர் நீராதாரத்தைக் கொண்டு, ஊராட்சியின் வாயிலாகவே குடிநீர் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.