ADDED : மார் 26, 2024 11:13 PM
சென்னை:தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்ரல், 19ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல், கடந்த 20ம் தேதி துவங்கியது.
முதல் நாளில் 22 பேர்; இரண்டாவது நாளில் ஒன்பது பேர்; மூன்றாம் நாளில், 47 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், 23, 24ம் தேதிகளில் மனுத்தாக்கல் நடக்கவில்லை.
அதற்குள் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்றும் பலர் மனு தாக்கல் செய்தனர். இன்று மாலை, 3:00 மணியுடன் மனுத்தாக்கல் நிறைவடைகிறது. மாலை 3:00 மணிக்குள், மனுத்தாக்கல் செய்ய வருகிறவர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டு கதவு மூடப்படும்.
டோக்கன் பெற்றவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பின், வருவோரை அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி உட்பட பலர் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
நேற்று வரை 700க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் நாளை பரிசீலிக்கப்படும்.
மனுக்களை வாபஸ் பெற, 30ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு, ஏற்கனவே தேர்தல் கமிஷன் வழங்கிய சின்னம் ஒதுக்கப்படும்.

