கல் மட்டுமல்ல; கள்ளையும் அனுப்பலாமே! விவசாயி கேள்வியால் அமைச்சர் அதிர்ச்சி
கல் மட்டுமல்ல; கள்ளையும் அனுப்பலாமே! விவசாயி கேள்வியால் அமைச்சர் அதிர்ச்சி
ADDED : மே 16, 2024 01:13 AM

பொள்ளாச்சி: 'தமிழகத்தில் இருந்து கல், ஜல்லி போன்ற கனிம வளங்களை மட்டும் தான் கேரளாவுக்கு அனுப்ப வேண்டுமா; தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கி அதையும் கேரளாவுக்கு அனுப்பலாமே...' என, விவசாயி கூறியதைக் கேட்ட அமைச்சர் அதிர்ந்து போனார்.
கோவை மாவட்டம், ஆனைமலை அருகே, சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டார்.
அப்போது, வேட்டைக்காரன்புதுாரைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம், அமைச்சரை வழிமறித்து, கள் இறக்க அனுமதி கோரினார்.
அப்போது அவர், 'தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கா விட்டாலும், கேரளாவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து ஜல்லி, கல், 'எம்-சாண்ட்' போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பும் போது, தென்னைமர கள்ளை ஏன் அனுப்பக் கூடாது.
'கள் இறக்கி, கேரளாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், விவசாயிகள் பயன் அடைவர். இல்லாவிட்டால், கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள், நிலத்தை விற்று விட்டு, கேரளாவுக்கு தான் செல்ல வேண்டும். இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' என்றார்.
'கல் அனுப்பலாம்; கள் அனுப்பக் கூடாதா...' என்ற விவசாயியின் கேள்வி, அமைச்சரை சற்று அதிர வைத்தது. சுதாரித்து பதிலளித்த அமைச்சர், ''இது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. தொடர்ச்சியாக விவாதித்து வருகிறோம். உரிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும்,'' என்றார்.