ADDED : மே 11, 2024 06:05 AM
மதுரை: தமிழகத்தில் உள்ள பங்குசந்தை முதலீட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய பங்கு சந்தையானது (என்.எஸ்.இ.,) செபி, பி.எஸ்.இ., உடன் இணைந்து மதுரை அண்ணாநகரில் முதலீட்டாளர் சேவை மையத்தை துவக்கியது.
என்.எஸ்.இ., முதுநிலை விற்பனை மற்றும் தொடர்பு அலுவலர் அர்ஜித் செங்குப்தா, கார்ப்பரேட் வணிக முதுநிலை மேலாளர் பிரியங்கா ராய் இதுகுறித்து கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய பங்கு சந்தைகளில் ஒன்றான என்.எஸ்.இ., முழுமையான இந்திய நிறுவனம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்து வருகிறது. நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்ட, முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. மின்னணு வர்த்தகத்தை அறிமுகப்படுத்தி முன்னோடியாக விளங்குகிறது.
பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான முதலீட்டாளர்களின் புகார்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை தீர்க்கும் வகையில் தமிழகத்தில் மதுரை அண்ணாநகரில் செபி, பி.எஸ்.இ., உடன் இணைந்து முதலீட்டாளர் சேவை மையத்தை உருவாக்கியுள்ளோம். மாநில அளவில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது உதவும்.
அனைத்து முதலீடு தொடர்பான தயாரிப்புகள், பரஸ்பர நிதி, பரிவர்த்தனை வர்த்தக நிதி, தங்கப்பத்திரம், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை, உள் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை போன்ற முதலீடு தொடர்பான தயாரிப்புகள் உள்ளன.
இத்தயாரிப்புகள் குறித்த கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இம்மையத்தின் நோக்கம். முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இம்மையம் உள்ளது என்றனர்.