2025 -- 26ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை சாதனை பட்ஜெட்டாக அறிவிக்க திட்டம் மூளையை கசக்கி அதிகாரிகள் தயாரிப்பு
2025 -- 26ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை சாதனை பட்ஜெட்டாக அறிவிக்க திட்டம் மூளையை கசக்கி அதிகாரிகள் தயாரிப்பு
ADDED : மார் 09, 2025 12:32 AM

சென்னை: தமிழக அரசின் 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டை, சாதனை பட்ஜெட்டாக அறிவிக்க, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, வரும் 14ம் தேதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக அரசின் கடன் ௮ லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் வர உள்ளது.
எனவே, அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தி.மு.க., ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இது.
எனவே, நிதிச்சுமை இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், மக்களை கவரும் வகையில், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, அரசின் சாதனை பட்ஜெட் போல் உருவாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தி.மு.க., அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் அம்சங்கள் நிறைந்த, சாதனை பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என, நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த பட்ஜெட்டை, தி.மு.க., அரசின், 100வது பட்ஜெட் என, அறிவிக்க திட்டமிடப்பட்டது.
அதாவது, நீதிக்கட்சி ஆட்சியில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டில் துவங்கி, இதுவரை எத்தனை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, கணக்கிட்டு அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 'நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து கணக்கிட்டால், பட்ஜெட் எண்ணிக்கை, 100ஐ தாண்டி விடும். எனவே, அது வேண்டாம்' என, சில அதிகாரிகள் கூறினர். அதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பட்ஜெட்டில் அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிடுவதுடன், மக்களை கவரும் வகையில், புதிய அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாத்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோபத்தை தணிக்க, சலுகைகள் அறிவிப்பது உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து, தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு அறிவிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு துறையிலும், புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற முடிவோடு, பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.