பட்டாவில் திட்டமிட்டு பிழை, அதிகாரிகள் விஷமத்தனம்; வீடு, மனை வாங்கியோர் அவதி
பட்டாவில் திட்டமிட்டு பிழை, அதிகாரிகள் விஷமத்தனம்; வீடு, மனை வாங்கியோர் அவதி
ADDED : பிப் 25, 2025 02:35 AM

சென்னை : நிலங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படும் பட்டாக்களில், அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்படுத்தும் பிழைகளால், வீடு, மனை வாங்கியோர் அவதிப்படுகின்றனர்.
வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவுக்கு பின், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக, தாலுகா அலுவலகங்களுக்கு மக்கள் அலைவதை தடுக்க, வருவாய் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் நிலையில், பத்திரப்பதிவு நிலையிலேயே தானியங்கி முறையில், பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, சார் - பதிவாளர் அடையாள சான்றுகளை சரிபார்த்தால் போதும். அதன் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய உரிமையாளர் பெயரில் பட்டா, 'ஆன்லைன்' முறையில் கிடைத்துவிடும். இந்த பட்டாவில் பெயர், மனை அளவு போன்ற விஷயங்களில், சிறு பிழைகள் காணபடுகின்றன.
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சரிபார்த்த பின் வழங்கப்படும் பட்டாக்களில், சிறு பிழைகள் காணப்படுகின்றன. வருவாய் துறையில் உள்ள அதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, இதுபோன்ற பிழைகளை ஏற்படுத்துகின்றனர்.
அப்போது தான் அதை சரிசெய்ய, மக்கள் தங்களை தேடி வருவர் என்ற நோக்கத்தில், இவ்வாறு செய்கின்றனர். இதைச் சரி செய்ய விண்ணப்பிக்க முன்வரும் போதும் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.
இதில், உயரதிகாரிகளை சந்திப்பதற்கு கூட, பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், வீடு மனை வாங்கியவர்கள், புதிய கட்டட அனுமதி, வங்கிக்கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டாக்களில் காணப்படும் எழுத்து பிழைகளை சரிசெய்ய, விண்ணப்பங்கள் அதிகமாக வருகின்றன. வழக்கமான பணிகளுடன் சேர்ந்து, இதன் மீது நடவடிக்கை எடுப்பதில், சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.