சி.எஸ்.ஆர்., நிதியில் நீர்நிலைகள் புனரமைக்க அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு
சி.எஸ்.ஆர்., நிதியில் நீர்நிலைகள் புனரமைக்க அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு
ADDED : செப் 20, 2026 11:05 PM
சென்னை: சி.எஸ்.ஆர்., எனப்படும், நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில், நீர்நிலைகளை புனரமைப்பதற்கு அனுமதி தராமல், தனியார் நிறுவனங்களை அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 14,401 ஏரிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் உள்ளன.
நிதி ஒதுக்கீடு நீர்நிலைகள் புனரமைப்பு பணிக்கு மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசும் ஒவ்வோர் ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்த நிதியில் மட்டுமின்றி, நபார்டு, பன்னாட்டு ஏஜன்சிகள், உலக வங்கி வாயிலாக கடனுதவி பெற்றும், நீர்நிலைகளில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தனியார் பங்களிப்புடன் நீர்நிலைகள் துார்வாரப்படும் என, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை துார்வார, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னையில் அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வார, சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
'ஷோகோ' என்ற தனியார் நிறுவனம் வாயிலாக, தஞ்சாவூரில் காயாவூர் ஏரி, பெரியநாயகி அம்மன் ஏரி, புதுக்கோட்டையில் நெடுவான்குளம் உள்ளிட்ட ஏரிகள், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரி முடிக்கப்பட்டு உள்ளன.
அதே நிறுவனம் வாயிலாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கட்டிக்குளம் கண்மாயை துார்வாரும் பணிகள், 9 கோடி ரூபாய், சி.எஸ்.ஆர்., நிதியில் துவக்கப்பட்டு உள்ளன.
இதேபோல, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் நிலையில், அனுமதி வழங்காமல், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
'எல் நினோ' பாதிப்பு இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலம் முழுதும் பரவலாக ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் இருந்தாலும், முறையான பராமரிப்பின்மை காரணமாக, அவற்றின் நீர்தேக்கும் திறன், நீர் கடத்தும் திறன் குறைந்துள்ளது. பல நீர்நிலைகளில் சீமை கருவேலங்கள், ஆகாய தாமரை, புற்கள் வளர்ந்து மண்டி கிடக்கின்றன.
இவற்றை சீரமைத்து கரைகளை பலப்படுத்தினால், அதிகளவில் நீரை சேமிக்க முடியும். நடப்பாண்டு 'எல் நினோ' பாதிப்பால், பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதற்குள் நீர்நிலைகளை துார்வாரும் பணிகளை முடிக்க வேண்டும்.
ஆனால், சமூக பொறுப்புணர்வு நிதியான சி.எஸ்.ஆர்., நிதியில் பணிகளை மேற்கொள்ள முன்வரும் நிறுவனங்களுக்கு, அனுமதி வழங்குவது இல்லை. பெரிய நிறுவனங்கள் மட்டுமே அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற்று வருகின்றன.
எனவே, சி.ஆர்.எஸ்., நிதியில் நீர்நிலைகளை மேம்படுத்தும் வழிமுறைகளை, அரசு எளிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
