ADDED : ஜூன் 20, 2024 11:08 PM
சென்னை:'முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட தலைநகரங்களில், வரும் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி தாலுகா கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் அருந்தியவர்களில், தற்போது வரை 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்த கோர சம்பவம், தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. தி.மு.க., அரசு பதவியேற்ற பின், இது, இரண்டாவது மிகப்பெரிய கள்ளச்சாராய மரண சம்பவம்.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, 'அரசு மதுபான கடைகளை மூட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்' என குடும்பத்தோடு சேர்ந்து, கருப்பு சட்டை, கையில் பதாகை என நாடகங்களை அரங்கேற்றியவர் ஸ்டாலின்.
ஆட்சி பொறுப்பேற்ற பின், டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகளை செய்வது மட்டுமின்றி, கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தை, தமிழகம் முழுதும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அரசு இயந்திரமும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், எந்த அளவிற்கு சட்ட விரோத கள்ளச்சாராய கும்பலுக்கு துணை போயிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை, உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

